- 1 : தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம்நாளிலே, சில்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சில்லாக்கின் மேலும் விழுந்து, சில்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,
- 2 : அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய் விட்டார்கள்.
- 3 : தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
- 4 : அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.
- 5 : தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரான அகினோவாமும், கர்மேல் ஊரான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைப்பிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள்.
- 6 : தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
- 7 : தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டு வா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
- 8 : தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார்.
- 9 : அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்று போனார்கள்.
- 10 : தாவீதோ, நாநூறுபேரோடுங்கூடத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் விடாய்த்துப் போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்று போனார்கள்.
- 11 : ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,
- 12 : அத்திப்பழஅடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்று நாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.
- 13 : தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்துதேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்கு முன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.
- 14 : நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின் மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும் படையெடுத்துப் போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான்.
- 15 : தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.
- 16 : இவன் அவனைக் கொண்டுபோய் விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள்.
- 17 : அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள்மேல் ஏறி ஓடிப்போன நாநூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.
- 18 : அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
- 19 : அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
- 20 : எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.
- 21 : விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையில் தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.
- 22 : அப்பொழுது தாவீதோடே நடந்துவந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரும்: அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக் கொண்ட கொள்ளையுடைமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள்.
- 23 : அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
- 24 : இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
- 25 : அப்படியே அந்நாள் முதற்கொண்டு நடந்துவருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள்வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான்.
- 26 : தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசிர்வாத பாகம் என்று சொல்லச் சொன்னான்.
- 27 : யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
- 28 : ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,
- 29 : ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,
- 30 : ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,
- 31 : எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.